20 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்
தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்டத்தின்கீழ் பணிபுரிந்த பணியாளர்கள் 20 மாதங்களாக நிலுவையில் உள்ள மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டு மனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 363 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
மதிப்பூதியம் வழங்க வேண்டும்
தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்டத்தின்கீழ் பணிபுரிந்த 20-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில், நாங்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களில் பணிபுரிந்தோம். எங்களுக்கு கடந்த 20 மாதங்களாக மதிப்பூதியம் வழங்கப்பட வில்லை. மேலும் இந்த திட்டமானது கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. எனவே நிலுவையில் உள்ள மதிப்பூதியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அளித்துள்ள மனுவில், நாங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
தூர்வார வேண்டும்
அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் கிராமம் கன்னிகோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் ஊரில் கானாறு உள்ளது. மழைக் காலங்களில் மழைநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், அதை கடந்து செல்ல சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் கால்வாய் தூர்வாரப்படாததால் பாலத்தின் அருகே தண்ணீர் தேங்கி பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. எனவே அதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
வேலூரை அடுத்த பாலமதியை சேர்ந்த 76 வயது முதியவர் தனது மனைவியுடன் வந்து அளித்துள்ள மனுவில், நான் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். அவரும், அவரது மனைவியும் எனது வீட்டுக்கு போலிபத்திரம் தயார் செய்து வீட்டை அபகரித்து உரிமை கொண்டாடுகின்றனர். இதுகுறித்து பல முறை பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மயங்கி விழுந்த பெண்
காட்பாடி அருகே கீழ்முட்டுக்கூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமரன் மனைவி ரமிலா என்பவர் தனது வாகனம் தொடர்பான பிரச்சினைக்காக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் காயிதே மில்லத் கூட்ட அரங்கில் மனு கொடுக்க சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.