20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் : முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் : முதல்-அமைச்சர்  திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 July 2022 2:42 PM IST (Updated: 7 July 2022 2:43 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று திறந்து வைத்தார்.

2021-22 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும். விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் – தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் – மானூர், திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், தருமபுரி மாவட்டம் – ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் – சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோன்று, 2022-23ஆம் ஆண்டிற்கான உயர் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் – தளி, புதுக்கோட்டை மாவட்டம் – திருமயம், ஈரோடு மாவட்டம் – அந்தியூர், கரூர் மாவட்டம் – அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் – திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் – ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் – வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ரூ. 152 கோடி மதிப்பிலான வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களையும் காணொலி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.


Next Story