காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்


காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
x

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சிப்காட்டை அடுத்த வடசேரிப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமமக்கள் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது.

அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 640 காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் வாடிவாசலுக்குள் அனுப்பினர். அதேபோல் 250 மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன் பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

20 பேர் காயம்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் வந்து கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வடசேரிப்பட்டி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை காயம்

ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சின்னக்கொம்பன் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அப்போது அந்த காளை வாடிவாசல் அருகே உள்ள கட்டையில் மோதி அங்கேயே மயக்கமடைந்து கீழே விழுந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த காளையை மீட்டு தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டு திடலில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி இலுப்பூர் அருகே திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வாடிவாசலை விட்டு வெளியே வரும் போது சுவற்றில் மோதி களத்திலேயே இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story