20 சதவித பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது


20 சதவித பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 சதவீத பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 சதவீத பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதல்-அமைச்சரின் முகவரித்துறையின் சிறப்பு குறைதீர்வு வாரம் குறித்த கூட்டம் மற்றும் சமூகப்பாதுகாப்புத் துறையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறையை தடுத்தல், குழந்தை இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி நலனுக்காக பிறப்பு சான்று, சாதி சான்று தாமதமின்றி பெறுவது, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது, குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

வாட்ஸ்அப் குழு

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, காவல் துறை, கிராம நிர்வாக அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த வாட்ஸ்அப் குழு அமைத்து உடனுக்குடன் தகவல் கொடுத்து குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நமது மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அந்த முகாம்களில் கலந்துகொண்டு பரிசோதனை செய்தவர்களில் 20 சதவிகிதம் பெண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. அதனை சரிசெய்ய நல்ல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

குழந்தை திருமணம், பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுருத்தல் குறித்த புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 மாணவிகளுக்கு தலா ரூ.2,250- வீதம் ரூ.22 ஆயிரத்து 250 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்,

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா; புஷ்பராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், எஸ்.ஆர்.டி.பி.எஸ். இல்ல இயக்குனர் என்.தமிழரசி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் செந்தில், குழந்தை நல குழு தலைவர் வேதநாயகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.==========


Next Story