ரவுடியின் உறவினர் வீட்டில் 20 பவுன் நகைகள் மீட்பு
திருச்சியில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான ரவுடியின் உறவினர் வீட்டில் 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான ரவுடியின் உறவினர் வீட்டில் 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகள்
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 38), இவரது தம்பி சோமசுந்தரம் (27). ரவுடிகளான இவர்கள் மீது கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல், கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் கடந்த 2½ வருடம் தலைமறைவாக இருந்தனர்.
நேற்று முன்தினம் உய்யகொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
துப்பாக்கி சூடு
இதில் கொள்ளையடித்த நகைகளை குழுமாயி அம்மன் கோவில் அருகே மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களை அந்த இடத்திற்கு அழைத்து செல்லும் போது எதிர்பாராத நேரத்தில் இருவரும் போலீசாரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து, தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதேபோல் ரவுடிகள் தாக்கியதில் போலீசாரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களில் காயம் அடைந்த போலீசாரும், ரவுடிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண் கைது
இதைத்தொடர்ந்து ரவுடிகள் கொள்ளையடித்த நகைகள் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அனுராதா (43) என்பவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உறையூர் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அனுராதாவை கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய அரிகரன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரையும் உறையூர் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.