டிப்பர் லாரியில் மின்கம்பிகள் சிக்கியதால் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன


டிப்பர் லாரியில் மின்கம்பிகள் சிக்கியதால் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன
x

வள்ளிமலை அருகே டிப்பர் லாரியின் தொட்டியில் மின்கம்பிகள் சிக்கியதால் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

வேலூர்

வள்ளிமலை

வள்ளிமலை அருகே டிப்பர் லாரியின் தொட்டியில் மின்கம்பிகள் சிக்கியதால் 20 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

மின்கம்பங்கள் சாய்ந்தன

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருகே மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து விஜயவாடா வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த சாலை அமைக்கும் பணிக்காக மகிமண்டலம் ஏரியில் இருந்து இரவு, பகலாக டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து சாலை அமைக்கும் பணிக்காக கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மண்ணை கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே லாரியை டிரைவர் இயக்கி உள்ளார். அப்போது சாலையில் மேலே இருந்த மின்கம்பிகள் டிப்பர் லாரியின் தொட்டியில் சிக்கி இழுத்து வரப்பட்டது. இதனால் சுமார் 20 மின்கம்பங்கள் உடைந்து கீழே சாய்ந்தன.

மின்சாரம் துண்டிப்பு

மின்கம்பங்கள் கீழே சாய்ந்ததால் மகிமண்டலம், பெரிய போடிநத்தம், புதூர் காதிரெட்டிபள்ளி கிராமம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியது.

அத்துடன் மின்சாரம் தடைப்பட்டு இருந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மண் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் பெரியமிட்டூர் மின் பகிர்மான அலுவலகத்திலிருந்து மின்சார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புதிய மின் கம்பங்களை அமைத்தனர். பின்னர் நேற்று மாலை சரி செய்யப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டது.


Next Story