காய்ச்சல், சளி தொல்லையால் 20 மாணவர்கள் பாதிப்பு
கன்னிகாபுரம் அரசு பள்ளியில் காய்ச்சல், சளி தொல்லையால் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவக்குழுவினர் பள்ளியில் முகாமிட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது, இந்த பள்ளியில் 70 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இருப்பினும் இந்த பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அனைவரையும் ஒரு வகுப்பறையில் வைத்து கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், காய்ச்சல், சளி, வாந்தி மற்றும் அலர்ஜி நோயால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர்.
தற்போது 20 மாணவர்கள் உடல் நிலைபாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவக்குழுவினர் முகாம்
இது குறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணன் அளித்த தகவலின் அடிப்படையில் ஓங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் பள்ளியில் முகாமிட்டு மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ஒரே வகுப்பறையில் மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருவதால், அவர்களுக்கு இதுபோன்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தவிர்க்க மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே காய்ச்சல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்ட 20 மாணவர்களும் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளனர்.