குளித்தலை அருகே 20 கிராம மக்கள் அவதி: தரைமட்ட பாலத்தை கடந்து செல்லும் தண்ணீர்
குளித்தலை அருகே தரைமட்ட பாலத்தை கடந்து தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவாயம் ஊராட்சி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சிவாயம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமப்பகுதிகள் உள்ளன. குளித்தலை- மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட குப்பாச்சிபட்டி பகுதியில் இருந்து கீழ கோவில்பட்டி, குறிகாரன்பட்டி, வேப்பங்குடி, ஈச்சம்பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் வழியாக சாலை ஒன்று செல்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிய அதிகப்படியான மழை நீர் தேசியமங்கலம் கிராம பகுதியில் இருந்து காட்டுவாரி மூலம் கீழகோவில்பட்டி பகுதியில் உள்ள சாலை வழியாக கடந்து சென்றது.
பொதுமக்கள் அவதி
இதன் காரணமாக சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், அத்தியாவசிய தேவைக்காக பொருட்களை வாங்க செல்வோர், வேலைக்கு செல்வோர், குடிநீர் எடுக்க செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த காட்டு வாரி வழியாக அதிகப்படியான தண்ணீர் சாலையை கடந்து செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், இங்குள்ள தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். அதுபோல மழைக்காலங்களில் மழை நீர் இப்பகுதியில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் வழியாக செல்வதால் வீடுகள் இடிந்து விடும் சூழ்நிலையிலும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகும் நிலை உள்ளது. எனவே மழைநீர் செல்ல சாலையோரம் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் முன்வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாலம் கட்ட வேண்டும்
கீழ கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சின்னம்மாள்:- மழைக்காலங்களில் இக்காட்டுவாரி வழியாக சாலையில் தண்ணீர் செல்வதால் சாலையை கடக்க முடியாமல் மிகவும் அவதி அடைகிறோம். குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை. ஆபத்தான நிலையிலே தண்ணீர் செல்லும் இச்சாலையை கடந்து செல்கிறோம். எனவே காட்டுவாரி தண்ணீர் செல்லும் இந்த வழியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் அவதி
வேப்பங்குடி பகுதியை சேர்ந்த கவிதா:- மழைக்காலங்களில் இந்த காட்டுவாரி வழியாக தண்ணீர் செல்வதால் சாலை கடந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் மிகவும் அவதி அடைகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மற்ற பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அதுபோல கால்நடைகளை மேய்க்க செல்வது, விற்பனைக்காக காலை, மாலை நேரங்களில் பால் கொண்டு செல்வது போன்றவற்றுக்கு இயலாத நிலை உள்ளது. இச்சாலை வழியாகவே இறந்தவர்களை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்மட்ட பாலம்
குறிக்காரன்பட்டியை சேர்ந்த மாணிக்கம்:- இச்சாலை வழியாக 20 ஊர் கிராம மக்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் கீழகோவில்பட்டி, ஆண்டி நாயக்கனூர் ஆகிய பகுதியில் உள்ள தரைப்பாலம் வழியாக காட்டுவாரியில் தண்ணீர் செல்கிறது. அச்சமயங்களில் இச்சாலையை கடப்பது மிகவும் ஆபத்தாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த தரைப்பாலம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசு உரிய கவனம் எடுத்து இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.