20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக அறிவிப்பு


20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2023 10:00 PM GMT (Updated: 24 Oct 2023 10:01 PM GMT)

வால்பாறையில் நீரில் மூழ்கி 5 மாணவர்கள் பலியாகினர். இதன் எதிரொலியாக 20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறையில் நீரில் மூழ்கி 5 மாணவர்கள் பலியாகினர். இதன் எதிரொலியாக 20 நீர்நிலைகள் ஆபத்தான இடங்களாக வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

20 இடங்கள்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் 10 பேர் கடந்த 20-ந் தேதி வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சோலையாறு சுங்கம் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் 5 பேரில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் முத்துசாமி வால்பாறை ஆற்று பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சோலையாறு சுங்கம் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது வனத்துறையினர், நீர்நிலை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய இடங்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட வேண்டியது என 20 இடங்கள் குறித்து தெரிவித்தனர்.

அறிவிப்பு பலகை

அதன்படி, கூழாங்கல் ஆறு, வாட்டர் பால்ஸ் ஆறு, கருமலை இறைச்சல்பாறை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு, கூடுதுறை ஆறு, வெள்ளமலைடனல் ஆறு, கெஜமுடி டனல் ஆறு, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தலநார் நீர்வீழ்ச்சி, காடம்பாறை அணை பகுதி, அப்பர் ஆழியாறு அணை பகுதி, சோலையாறு அணை பகுதி, காடம்பாறை 501 டனல் ஆறு, சின்னக்கல்லாறு, சேடல் டேம் ஆறு, அணலி நீர்வீழ்ச்சி, மானாம்பள்ளி தங்கவேல் நீர்வீழ்ச்சி ஆகிய நீர்நிலை பகுதிகளும், வாட்டர்பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை ஆகிய 20 பகுதிகள் ஆபத்தான இடங்களாகவும், தடை செய்யப்பட்ட பகுதியாகவும் வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில், சோலையாறு சுங்கம் ஆற்று பகுதியில் நீரில் மூழ்கி பலியான 5 மாணவர்களின் உருவப்படங்களுடன் கூடிய ஆபத்தான பகுதி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் இந்த ஆற்று பகுதி ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும், சுழல்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story