அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு 20 ஆண்டு சிறை


அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது

கோயம்புத்தூர்

கோவை

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 57). இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணி புரிந்தார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனை கண்ட குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பின் இந்த வழக்கு புலியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி ரவிசந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.


Next Story