20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை உயிரிழப்பு
20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை உயிரிழந்தது.
திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் விசு. இவர் கடந்த 25 ஆண்டுகளாக பரட்டை என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். அந்த காளையை விசுவின் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் ஒருவர்போல் பாவித்து வளர்த்தனர்.
இந்த காளை உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பல பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலந்து கொண்டுள்ளது. இந்த காளை கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் ஏராளமான பரிசுகளை குவித்து வந்தது. வயது முதிர்வு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இந்த காளை நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் காளையின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், அந்தபகுதியில் குழிதோண்டி காளையை அடக்கம் செய்தனர்.