பலத்த மழையால் 200 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
பலத்த மழையால் 200 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
தஞ்சை அருகே பலத்த மழையால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பலத்த மழை
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும். தஞ்சை மாவட்டத்தில் கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது.
மேலும் குறுவை சாகுபடிக்கான பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
நெற்பயிர்கள் சேதம்
தஞ்சையை அடுத்த ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் கோடை பருவ நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில் பலத்த மழையால் சாய்ந்து சேதமடைந்தன. இதன் காரணமாக ஏறத்தாழ 200 ஏக்கரில் கோடை பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல, அம்மாப்பேட்டை பகுதியிலும் கதிர் முற்றி வந்த நிலையில் இருந்த ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.