கோவையில் 200 பேரை போலீசார் தீவிர கண்காணிப்பு


கோவையில் 200 பேரை போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 200 பேரை போலீசார் தீவிர கண்காணிப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்று உள்ளதால் கோவையை சேர்ந்த 200 பேரை போலீசார் கண்காணித்து வருவதுடன், அவர்களின் செல்போன் அழைப்புகள், சமூக வலைத்தள தகவல்களை கண்காணித்து வருகிறார்கள்.

கார்வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 27) என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், முகமது பாரூக் உள்பட 11 பேரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

ஐ.எஸ்.பொறுப்பேற்பு

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றதால், கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்காணிக்க போலீஸ் உயர் அதிகாரி தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்ட உள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

200 பேர் கண்காணிப்பு

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதில் 200 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அந்த நபர்கள் செல்போன்கள், சமூக வலைத்தளங்களில் யார் யாரிடம் பேசி வருகிறார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளதாக கூறியுள்ளது. அந்த அமைப்பின் இணைய தள பக்கத்தை, ஏற்கனவே நாங்கள் கண்காணித்து வரும் 200 பேரும் பதிவிறக்கம் செய்து உள்ளனரா?, அது தொடர்பாக யாரிடமும் பேசினார்களா என்பது குறித்து ரகசியமாக கண்காணித்து வருகிறோம்.

தீவிர விசாரணை

மேலும் ஐ.எஸ். வெளியிட்டு இருப்பது உண்மைதானா? அல்லது அந்த அமைப்பின் பெயரில் வேறு யாராவது வெளியிட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இது தொடர்பான கருத்துக்களை யாராவதுசமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Related Tags :
Next Story