காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்


காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
x
தினத்தந்தி 24 Nov 2022 5:51 PM GMT (Updated: 24 Nov 2022 5:54 PM GMT)

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள். வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள். வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்ல முடிவது இல்லை.

அரியலூர்

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது. ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்து செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தை சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பக்தர்களை அதிகளவில் அனுப்ப வேண்டும்

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ராமச்சந்திரன்:- தமிழக அரசின் இந்த அறிவிப்பு காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக கருதுகிறேன். மேலும் இந்த திட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் செல்லலாம் என அனுமதி அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பக்தர்களை தேர்வு செய்து அதிகளவில் அனுப்ப வேண்டும்.

அரசியல் தலையீடு

விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன்:- காசிக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிப்பது மிகவும் சிறந்த திட்டம். ஆண்டுக்கு 200 நபர்களுக்கு மட்டும் நிதியுதவி அளிப்பது என்பது மிகவும் குறைவாகும். ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிறந்த திட்டம் என்றாலும் இதில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் நேர்மையான முறையில் சரியான பக்தர்களை அதிகளவில் காசிக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ்:- காசி ஆன்மிக பயண திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இதனால், இந்துக்களுக்கான காசி யாத்திரையை அரசு முன்னெடுக்கவில்லையே என்ற மனக்குறை நீங்கியிருக்கிறது. காசி யாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் தொடங்குவதே ஐதீகம். அதை அரசு சிறப்பாக செய்துள்ளது. மேலும் மாவட்டந்தோறும் 200 பேரை அழைத்துச் செல்லும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மொத்தத்தில் இந்த திட்டம் இந்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Related Tags :
Next Story