வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள்
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் நாளை முதல் 2 நாட்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்ரா பவுர்ணமி
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் சாமி தரிசனத்துக்கு பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை தீப திருவிழா மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூரில் இருந்து 60 பஸ்கள், சென்னையில் இருந்து 50 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 40 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்கள், பெங்களூருவில் இருந்து 10 பஸ்கள், தாம்பரம், சோளிங்கரில் இருந்து தலா 5 பஸ்கள் என்று மொத்தம் 200 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் நாளை காலை முதல் 2 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.