சேலத்தில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலத்தில் 2 ஆயிரம் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சேலம்,
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரம் சிலைகள்
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அந்த பந்தலில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.
இதனிடையே, வீதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சேலம் மாநகரில் சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.