சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:45 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தி

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போல் நேற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகமும் நடந்தது. அதைத்தொடர்ந்து நல்லெண்ணெய், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பச்சரிசி மாவு, எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, நெய், தேன், விபூதி, பன்னீர் ஆகிய 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

முன்னதாக நீலகண்ட விநாயகர் சுவாமி சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் அபிஷேக பொருட்கள் பக்தர்களால் கொண்டுவரப்பட்டது. பகல் 1.30 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு, வடை, பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி ஆகியவை பிரசாதமாக கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. 1 லட்சம் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கலையரங்கத்தில் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

புஷ்பாபிஷேகம்

மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம், சிவந்தி, முல்லை, கொழுந்து, மரிக்கொழுந்து, துளசி உள்பட பல்வேறு பூக்களால் புஷ்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது.

விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விஜய்வசந்த் எம்.பி.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி, குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தேவசம் முன்னாள் கண்காணிப்பாளர்கள் சோணாச்சலம், குற்றாலம், தேவசம் மராமத்து பொறியாளர்கள் அய்யப்பன், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

மேலும் தீயணைப்பு துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் அடிப்படை வசதிகள் செய்து இருந்தனர்.


Next Story