திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடல்


திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரம் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடல்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

திருச்சி

மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மேலும் பொருளாதார மந்த நிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. மின் கட்டண உயர்வால், தொழில்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கப்படவில்லை. பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும். எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்து பழைய கட்டண முறையையே அமல்படுத்த வேண்டும்.

சோலார் நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். 112 - 150 கிலோ வாட்ஸ் வரை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்நுகர்வோர் தொழில் கூட்டமைப்பு சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

கதவடைப்பு போராட்டம்

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று 165 தொழில் அமைப்புகள் சார்பில் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்து, கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களிலும் மின் நுகர்வோர் தொழில்கூட்டமைப்பு சார்பில் நேற்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரியமங்கலம், திருவெறும்பூர், துவாக்குடி, வாழவந்தான்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பகுதி சிப்காட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள வெல்டிங் பட்டறைகள், சிறிய அரவை ஆலைகள் என்று சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன.

இதனால் திருச்சி மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நேற்று வேலை இழப்பை சந்தித்தனர். சுமார் ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story