கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Sept 2023 3:15 AM IST (Updated: 20 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

சிலைகள் ஊர்வலம்

கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரில் மொத்தம் 682 விநாயகர் சிலைகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிலை கரைப்பு (விஜர்சனம்) ஊர்வலம் இன்றும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி இன்று மொத்தம் 384 விநாயகர் சிலைகள் குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளங்களில் கரைக்கப்படுகிறது. சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பாதுகாப்புக்காக மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்தும் சிறப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்களில் வழிநெடுகிலும் மொத்தம் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் நடைபெறும் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கவும், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கோவையில் நடைபெறும் ஊர்வலத்தை கண்காணிக்கும் வகையில் இணைய தளத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வெளிமாவட்டத்தில் இருந்து வந்தால் கைது

மேலும் விநாயகர் சிலையுடன் வருபவர்களின் பெயர் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கலந்துகொண்டு சட்டம்-ஒழுங்கிற்கு பிரச்சினை ஏற்படுத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்றவர்களை அனுமதித்தால், அவர்களை அழைத்து வரும் ஊர்வல ஏற்பட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

நாளை மறுநாள் மாநகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 271 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 27 சிலைகளும் கரைக்கப்படுகிறது. முத்தண்ணன்குளம், வெள்ளலூர் குளங்களில் இந்த சிலைகளை கரைக்கவும், குறிப்பிட்ட பாதைகளில் மட்டும் ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story