கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

கோவையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்ததை தொடர்ந்து இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 2 ஆயரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்ததை தொடர்ந்து இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 2 ஆயரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆயுள் தண்டனை கைதி

கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் (வயது 42). இவர் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலை பெற்றார். இந்த நிலையில் மதுரையில் நடந்த சிறை அதிகாரி கொலை வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறைத்துறை சார்பில் அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

இதை தொடர்ந்து அபுதாகிரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அவருக்கு நிரந்தர பரோல் அளிக்கப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவருடைய உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடல் அடக்கம்

இதையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் இருந்து அபுதாகிரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வின்சென்ட் சாலை, குட்ஷெட் சாலை, புரூக் பாண்ட் ரோடு வழியாக பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் பள்ளி வாசல் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு இருக்கும் கபர்ஸ்தானில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அபுதாகிரின் உடல் ஆம்புலன்சில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டபோது, அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

பலத்த பாதுகாப்பு

இதையொட்டி கோவையில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதாவது கோவை கோட்டைமேடு, உக்கடம் பஸ்நிலையம், ரெயில் நிலையம், ஆர்.எஸ்.புரம் உள்பட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதுபோன்று அந்த பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்கள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

2 ஆயிரம் போலீசார்

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, வருகிற 14-ந் தேதி கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தினம் என்பதாலும், ஆயுள்தண்டனை கைதி பரோலில் இருக்கும்போது உயிரிழந்த காரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என்றனர்.


Next Story