2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா?
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா? என வங்கியாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. வீடுகளில் வைத்திருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் பட்ட கஷ்டத்திற்கு அளவே இல்லை.
ரிசர்வ் வங்கி
இந்தநிலையில் தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரைத்தான் செல்லுபடியாகும் என்ற நிலையில் அந்த ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று இருக்கிறது.
இந்த அறிவிப்பு ஏதும் அதிர்ச்சியாக தெரிகிறதா? அல்லது எதிர்பார்த்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர், வங்கியாளர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுகுறித்த விவரம் வருமாறு:-
வரவேற்பு
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க செயலாளர் இதயம்முத்து:-
மத்திய அரசு கடந்த முறை பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த போது மக்களிடையே பண பரிவர்த்தனைக்கு பற்றாக்குறை இருக்கக் கூடாது என்பதற்காக 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டது. பின்னர் படிப்படியாக 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவது குறைக்கப்பட்டது. எனவே மத்திய அரசு மீண்டும் அதனை திரும்ப பெறுவதில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
கள்ளச்சந்தை பண பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம். நேர்மையாக வணிகம் செய்வோருக்கோ பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது தான். ஒருவேளை அடுத்து வரும் தேர்தல்களில் பணப்புழக்கம் இருக்கக் கூடாது என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
பொருளாதார உறுதித்தன்மை
பொருளியல்நிபுணர் டாக்டர் வைரமுத்துவேல்:-
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது சாதாரண மக்களை பாதிக்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டு என்பது சாதாரண மக்களிடம் இருக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படும் என்ற தகவல் பரவலாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டை வைத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டார்கள்.
எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் மத்திய அரசு ஆயிரம் ரூபாய் நோட்டை மதிப்பிழப்பிற்குட்படுத்தியநிலையில் 2,000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் கொண்டு வந்தது ஏற்புடையதல்ல. மேலும் நினைக்கும்போதெல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டை திரும்ப பெறுதல் போன்ற நடவடிக்கை ஒரு உறுதித்தன்மை இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறது. வெளிநாடுகளில் இந்தியாவை பற்றிய பார்வையில் ஏளனம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திடீரென தனி மனித விருப்பு, வெறுப்புக்கேற்ப இம்மாதிரியான முடிவுகள் எடுப்பது பொருளாதார உறுதித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அடுத்து வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு இம்மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இம்மாதிரியான நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில் சாதாரண மக்கள் இம்மாதிரியான அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.
பாதிப்பு இல்லை
நிதி ஆலோசகர் வ.நாகப்பன் கூறும்போது, 'உலகம் முழுவதும் ரூபாய் நோட்டுகளை பொறுத்தவரையில் ரூ.1, ரூ.2, ரூ.5 என்றும், அடுத்தகட்டமாக ரூ.10, ரூ.20, ரூ.50 தொடர்ந்து ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 என்று தான் இருப்பது வழக்கம். இப்படி இருந்தால் தான் குறைந்த தொகையை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள எளிதாக இருக்கும் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக அறிவித்து இருப்பது நல்ல முடிவுதான்.
பொருளாதார ரீதியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜி.பே, கியு.ஆர். கோடு உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகள் செய்வதால் ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து எடுப்பதால் சாமானியர்கள் எவரும் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள், ஒரு சில தொழில் அதிபர்களுக்கு பாதிப்புகள் வரலாம். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரும்போது எந்தவித தகவல்களும் தெளிவாக தெரிவிக்காமல் வெளியிட்ட அறிவிப்பால் பொதுமக்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள். ஆனால் தற்போது பொதுமக்களுக்கு இதுதொடர்பாக எந்தவித சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதற்கான பதில்களை தெளிவாக வழங்கி உள்ளது. அத்துடன் பணத்தை மாற்றிக்கொள்வதற்கும் போதிய கால அவகாசமும் வழங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் எந்தவித பதற்றமோ, குழப்பமோ ஏற்படவில்லை. மத்திய அரசு மட்டுமே குறிப்பிட்ட பணம் செல்லாது என்று அறிவிக்க முடியும் என்பதால், ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுப்பதாக போதிய தகவல்களுடன் அறிவித்து உள்ளது. 2016-ம் ஆண்டு பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்று தற்போது போதிய கால அவகசாம், தகவல்கள் தெளிவாக கொடுத்திருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாட்டில் 80 சதவீத பரிவர்த்தனை யு.பி.ஐ., என்ற ஆன்லைன் மூலம் நடப்பதால் தற்போது ரூ.2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மறைமுக சலுகை
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறும்போது, 'கருப்பு பணத்தை ஒழித்துவிடுவோம், கள்ளப்பணத்தை ஒழித்துவிடுவோம் என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இது தனிநபரிடம் குவிந்ததை பார்த்து இருக்கிறோம்.
ரிசர்வ் வங்கி அச்சிட்ட ரூ.2 ஆயிரம் பண நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறையத் தொடங்கியது. சுமார் ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் கோடி மதிப்பில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அவற்றுள் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மீதம் உள்ள சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் ரூபாய் பண நோட்டுகள் கருப்பு பணமாக மாறி உள்ளது தெரியவருகிறது. இப்போது கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.2 ஆயிரம் பண நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றுக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. காரணம் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணத்திற்கு காரணம் என்று கூறிய மத்திய அரசு, ரூ.2 ஆயிரம் நோட்டை அச்சிட முடிவு செய்தது விந்தையாக உள்ளது. நாட்டில் கருப்பு பணம் புழங்குவது அனைவருக்கும் தெரிந்தது. அதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக பொதுமக்களுக்கு தொல்லை தர கூடிய இதுபோன்ற நடவடிக்கைகள் தேவையற்றது. கருப்பு பணம் என்பது யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது மத்திய அரசுக்கு தெரியும். அவர்களிடம் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக பல கோடி ரூபாய்களை பெற்ற பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது இயலாதது. அதன் காரணமாகத்தான் இந்த அறிவிப்பிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுகிறார்களே ஒழிய, சட்டவிரோதமாக பண மதிப்பிழப்பை வாபஸ் என்று கூறவில்லை. எனவே இது கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு மறைமுக சலுகையாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது'.
பயன் இல்லை
சத்திரப்பட்டி மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியம்:- .ஏற்கனவே 2016-ல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பால் இன்று வரை கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. தற்போது ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மக்களை சிரமப்படுத்தும் வகையில் உள்ளது.
ஏற்கனவே சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் கண்ணில் பார்ப்பது அரிதாக உள்ளது. இதனால் யாருக்கும் எந்தவித பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீண்ட வரிசை
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வியாபாரி வன்னியராஜ்:- தற்போது 2,000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது மிகவும் வேதனைக்கு உரியது ஆகும். கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஏழைகளிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கு வழிவகை செய்கிறது. சாதாரண குடிமக்கள் வைத்திருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இனி வங்கியில் வந்து நீண்ட வரிசையில் நின்று மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுபோன்று அடிக்கடி ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பது அரசின் நிலையற்ற போக்கை காட்டுகிறது.
பெரும் கஷ்டம்
சிவகாசியை சேர்ந்த மெக்கானிக் குருநாதன்:- வருகிற செப்டம்பர் மாதம் வரை தான் ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லும் அதன் பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த ஒரு வருடமாகவே வங்கிகளில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் பெற முடியவில்லை.
அப்போதே சந்தேகம் வந்தது. எப்போது வேண்டும் என்றாலும் திடீரென ரூ.2,000 செல்லாது என்று அறிவிப்படும் என்று நினைத்தேன். அதேபோல் நடந்து விட்டது. ஏழைகளிடம் ரூ.2,000 நோட்டு புழகத்தில் வருவது என்பது எளிதான காரியம் அல்ல பெரும் கஷ்டம். அதனால் எங்களை போன்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுக்களை அதிகளவில் புழகத்தில் விட வேண்டும்.
மிகவும் அரிது
அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்த நிஷா:-
சமீப காலமாக ரூ.2 ஆயிரம் நோட்டை பார்க்க முடியவில்லை. மிகவும் அரிதாக தான் காண முடிந்தது. தற்போது ரூ.2ஆயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பாமர மக்களை எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக்காது.
ஏழை நடுத்தர குடும்பங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு என்பதே கிடையாது என்ற நிலை தான் உள்ளது. இதனால் வங்கி வாசலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படாது.
வங்கி கடன்
ஆலங்குளம் பெரியார்நகரை சேர்ந்த ஆசிரியை அகிலா:-
முக்கிய தேவைக்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஒரு குறிப்பிட்ட அளவு வீடுகளில் வைத்து இருக்கிறார்கள். அதுபோன்ற பணம் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் வெளியே வரும். இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் வங்கிகளும் பணத்தை கையில் வைத்திருக்க விரும்பாமல் அதிகளவு கடன் வழங்கவும் முன்வருவார்கள்.
வியாபாரிகள் குழப்பம்
எஸ்.மறைக்குளம் தனசேகர்:-
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எந்த நேரத்தில் எந்த ரூபாய் நோட்டு செல்லாமல் போகும் என்றே தெரியவில்லை.
இதனால் பொதுமக்களும், வியாபாரிகள், தொழில்முனைவோர் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இப்படி அடிக்கடி பணம் செல்லாது என்று அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
செட்டியார்பட்டியை சேர்ந்த குடும்பத்தலைவி மகேஸ்வரி:-
ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என்று திடீர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி இவ்வாறு அறிவிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் இல்லாமல் இருந்தது. அப்போதே நிறைய பேருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தற்போது தெளிவாகி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.