ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் சுப்பிரமணிய சாமி நம்பிக்கை


ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் சுப்பிரமணிய சாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2016 10:15 PM GMT (Updated: 31 Dec 2016 7:27 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என சுப்பிரமணிய சாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என சுப்பிரமணிய சாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு கோரிக்கை 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டிலாவது நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த பா.ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணிய சாமியிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:–

புதிய பட்டியல் 

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டத்தில் எந்த வித தடையும் இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் தொடர்பாக ஒரு அறிவிக்கையை வெளியிட்டனர். அந்த பட்டியலில் மாடுகளை சேர்த்துவிட்டனர். இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் இருந்து மாடுகளை நீக்க வேண்டும் என்று மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளேன். அதன்படி மாடுகளை நீக்கி புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

இதைப்போல ஜல்லிக்கட்டில் மாடுகளை கொடுமைப்படுத்தவில்லை, எந்த மாடும் சாகவில்லை என நீதிமன்றத்திலும் வாதம் செய்துள்ளேன். ஜல்லிக்கட்டு எப்படி நடக்கிறது? என்பதை பார்க்க ஒரு குழுவை நீதிமன்றம் ஏற்படுத்தலாம் என்றும் கோரியுள்ளேன். இந்த வழக்கில் 14–ந் தேதிக்கு முன் தீர்ப்பு வந்துவிடும். அந்த தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஜெயலலிதா மறைவு 

பணமதிப்பு இழப்பு விவகாரம் நல்ல திட்டம் தான். ஆனால் இந்த திட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. இந்த திட்டம் குறித்து பிரதமர் தான் விளக்க வேண்டும். ஆனால் பணமதிப்பு இழப்பு பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை கிடையாது. பணப்பிரச்சினை விரைவில் சரியாகிவிடும்.

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டு இருக்கக்கூடாது. மாறாக மத்திய–மாநில அரசுகளுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கவேண்டும். இந்த வழக்கு 9–ந் தேதி விசாரணைக்கு வரும் போது நோட்டீஸ் வழங்க உத்தரவிடுவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.



Next Story