சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் சிக்கி 4 பேர் பலி 300–க்கும் மேற்பட்டோர் காயம்


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் சிக்கி 4 பேர் பலி 300–க்கும் மேற்பட்டோர் காயம்
x
தினத்தந்தி 1 Jan 2017 9:15 PM GMT (Updated: 1 Jan 2017 5:52 PM GMT)

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் சிக்கி 4 பேர் இறந்தனர். 300–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சென்னை,

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் சிக்கி 4 பேர் இறந்தனர். 300–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சென்னை முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர். சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் வைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுதல், மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தல் என சில இடங்களில் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்றன.

மெரினா கடற்கரை சாலை, பெசன்ட் நகர், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போது நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். 300–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் 65–க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டம் அச்சம்பட்டியை சேர்ந்த முத்து (வயது 19) வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட வேளச்சேரியில் இருந்து நண்பர் விஷ்ணுமூர்த்தியுடன் (24) மோட்டார் சைக்கிளில் கோடம்பாக்கம் நோக்கி வந்த போது தியாகராயநகர் உஸ்மான் சாலையில் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்து இறந்தார். விஷ்ணுமூர்த்தி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த விஜயகுமார் (23) கைது செய்யப்பட்டார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிஷோர்குமார் (24) புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது பேசின்பிரிட்ஜ் பாலத்தின் அருகே தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

ஐ.சி.எப். காந்திநகரை சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தி (55) நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். வில்லிவாக்கம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த 2 பேர் மீதும், புத்தாண்டு கொண்டாடியவர்கள் யாராவது உற்சாக மிகுதியில் மோதி விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மோதலில் 25 பேர் காயம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில் 25 பேர் காயம் அடைந்தனர். புத்தாண்டையொட்டி பட்டாசு வெடித்த போது முத்து (31) தீக்காயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story