போலீஸ் அராஜகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி


போலீஸ் அராஜகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2017 2:30 AM IST (Updated: 1 Jan 2017 11:24 PM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசாரின் அராஜகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசாரின் அராஜகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கண்டனம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்களாகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை என்ற மக்கள் பிரச்சினைக்காக ஜனநாயக முறையில் சென்னை மேடவாக்கம் மாம்பாக்கம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கத்தினரை தாக்கியதை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த தாக்குதல் நடத்திய போலீசார் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 பேர் மீது புனையப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதுடன், எவ்வித நிபந்தனையுமின்றி அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

மனித உரிமை மீறல்கள்


கண்ணகிநகர், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, வேளச்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில், ‘லாக்கப்’ மரணங்கள் (சிறை மரணம்) மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அண்மையில் கண்ணகி நகரில் நடைபெற்ற லாக்கப் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மனித உரிமை பிரிவு ஆய்வு செய்து, போலீசார்தான் கொலை செய்துள்ளனர் என்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

தொடர்ந்து அந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் லாக்கப் மரணம் மனித உரிமை மீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடுவதை வன்மமாக கொண்டு இந்த தாக்குதலை போலீஸ் நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தும் போது சமீப காலத்தில் போலீசார் இது போன்ற அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

தமிழக அரசு ஜனநாயக ரீதியாக இயக்கம் நடத்துவோர் மீது இதுபோன்ற தாக்குதலை தொடுக்காமல் தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்


இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘போலீஸ் அராஜகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் மனித உரிமை ஆணையத்திலும் முறையிடுவோம். ரூபாய் நோட்டு விவகாரத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மவுனம் சாதித்து வருகிறார். மற்றொருபுறம் போலீஸ் தடியடி நடத்துகிறது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டது. ஆகவே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதேபோல போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கூறும்போது, ‘போராட்டத்தின்போது போலீசார் தங்களிடம் அநாகரிகமான முறையில் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக’ தெரிவித்தனர்.

Next Story