விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்; மு.க.ஸ்டாலின் பேட்டி


விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்; மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2017 6:45 PM GMT (Updated: 2 Jan 2017 5:46 PM GMT)

விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவத

சென்னை,

விவசாயிகள் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயிகள் தற்கொலை

அ.தி.மு.க.வின் ஆட்சியை பொறுத்தவரையில், முந்தைய 5 வருடகால ஆட்சியாக இருந்தாலும் சரி, அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இப்போதைய ஆட்சியாக இருந்தாலும் சரி, தமிழக விவசாயிகள் தொடர்ந்து பல கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி, பல்வேறு போராட்டங்கள் நடத்தும் நிலையில், குறிப்பாக எலிக்கறி சாப்பிட வேண்டிய நிலையில், பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அதைவிட கொடுமை என்னவெனில், தமிழகத்தில் தினம் தினம் 5 பேர் அல்லது 6 பேர் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியின் காரணமாகவும் உயிரிழக்கும், கொடுமையும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி இறந்திருக்கக்கூடிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட வேண்டும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நிதியுதவிகளை வழங்கிட வேண்டும் என்று நான் தொடர்ந்து பலமுறை இந்த அரசுக்கு வேண்டு கோளாக எடுத்து வைத்திருக்கிறேன்.

சிறப்பு தீர்மானம்

‘உடனடியாக சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பதற்கு ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்’, என்று நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல, பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதைத்தான் வலியுறுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த கோரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இந்த ஆட்சியில் இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

தி.மு.க. பங்கேற்கும்

கேள்வி:– 5–ம் தேதி நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா?.

பதில்:– இந்த மறியல் போராட்டம் மட்டுமல்ல, விவசாய சங்கங்கள் நடத்தும் எந்த போராட்டமாக இருந்தாலும் அதில் தி.மு.க. தொடர்ந்து பங்கேற்று வருகிறது. எனவே அந்த நிலை நிச்சயமாக தொடரும்.

கேள்வி:– ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வுகளை மத்திய அரசு தடை செய்தாலும், தடையை மீறி நடத்த வேண்டும் என அதன் ஆதரவாளர்கள், ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்களே?.

பதில்:– ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, அந்த விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போராட்டமே நடைபெறுகிறது. மத்திய அரசு தொடர்ந்து உறுதிமொழி தந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டு நடத்தி விடுவோம் என்று சொல்கிறார்கள். எனவே, அதன்படி எப்படியும் நடந்துவிடும் என்று நம்புவோம். அது நிறைவேறாத பட்சத்தில், அதுபற்றி பேசி முடிவெடுக்கலாம்.

கேள்வி:– மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரம் வெற்றியா, தோல்வியா?.

பதில்:– மிகப்பெரிய தோல்வி.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story