மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தேர்தல் வழக்கு: செலவு கணக்கு குறித்து விளக்கம் அளிக்க மாநில தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு


மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தேர்தல் வழக்கு: செலவு கணக்கு குறித்து விளக்கம் அளிக்க மாநில தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2017 7:56 PM GMT (Updated: 2 Jan 2017 7:56 PM GMT)

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கில் செலவு கணக்கு குறித்து விளக்கம் அளிக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வருகிற 11–ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த தேர்தல் வழக்கில் செலவு கணக்கு குறித்து விளக்கம் அளிக்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வருகிற 11–ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் வழக்கு

தமிழக சட்டசபைக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இதில், மு.க.ஸ்டாலின் 2 ஆயிரத்து 734 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

செலவு அதிகம்

இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, சைதை துரைசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வக்கீல்களின் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது.

சைதை துரைசாமியின் சார்பில் ஆஜராகிய மூத்த வக்கீல், ‘மு.க.ஸ்டாலின் அளவுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்தும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தியும், தேர்தலில் வெற்றி பெற்றார் என்று வாதிட்டார். இதற்காக தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் செய்த செலவுகளின் விவரங்களை, சில ஆதாரங்களை எடுத்துக்கூறி அவர் வாதிட்டார்.

மு.க.ஸ்டாலின் மனு

இதையடுத்து மு.க.ஸ்டாலின் தரப்பு வக்கீல் வாதம் செய்ய தொடங்கினார். அவரது வாதத்துக்கு இடையே ஒரு புதிய இடைக்கால மனு மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:–

தேர்தலின் போது அளவுக்கு அதிகமாக என் தரப்பில் செலவு செய்யப்பட்டது என்று மனுதாரர் சைதை துரைசாமி தன்னுடைய தேர்தல் வழக்கு மனுவில் குற்றம் சாட்டவில்லை. அவர் இந்த வழக்கில் ஐகோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும்போது, இந்த குற்றச்சாட்டை குறிப்பிடவில்லை. வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்துள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்ததாக என் மீது குற்றம் சாட்டி மனுதாரரின் வக்கீல் வாதம் செய்கிறார். மனுதாரர் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த நிலைபாடு, வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விளக்கம் அளிக்க வேண்டும்

மேலும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர், அவருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுகளை பெற்ற 2 வேட்பாளர்கள் ஆகியோரது தேர்தல் செலவு கணக்குகளை, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அந்த செலவு கணக்கு விவரத்தில் முதல் 2 பக்கங்கள் மட்டுமே அந்த இணையதளத்தில் உள்ளது. ஆனால், என்னுடைய தேர்தல் செலவு கணக்கு விவரங்களை கொண்ட அதிக பக்கங்களை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். கூடுதலாக இந்த ஆவணங்கள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து விசாரிக்க வேண்டியதுள்ளது.

எனவே, என்னுடைய செலவு கணக்கு விவரங்களுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி இந்த கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஆஜராக வேண்டும்

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.வேணுகோபால், ‘கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் செய்த தேர்தல் செலவு கணக்கு விவரங்களுடன், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வருகிற 11–ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.


Next Story