பொது செயலாளராக பதவி ஏற்ற நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சசிகலா சந்திக்கிறார்; நாளை முதல் 9–ந் தேதி வரை ஆலோசனை


பொது செயலாளராக பதவி ஏற்ற நிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சசிகலா சந்திக்கிறார்; நாளை முதல் 9–ந் தேதி வரை ஆலோசனை
x
தினத்தந்தி 3 Jan 2017 2:35 AM IST (Updated: 3 Jan 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

பொது செயலாளராக பதவி ஏற்ற நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சசிகலா சந்திக்க இருக்கிறார். நாளை (புதன்கிழமை) முதல் 9–ந் தேதி வரை நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா மரணம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்–அம

சென்னை,

பொது செயலாளராக பதவி ஏற்ற நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சசிகலா சந்திக்க இருக்கிறார். நாளை (புதன்கிழமை) முதல் 9–ந் தேதி வரை நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

ஜெயலலிதா மரணம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்–அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் (டிசம்பர்) 5–ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

அவர் மறைவைத் தொடர்ந்து, அன்று இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்–அமைச்சராக, நிதியமைச்சராக இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். மறுநாள் (டிசம்பர் 6–ந் தேதி) ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது.

பொதுச் செயலாளரானார், சசிகலா

இந்த நிலையில், தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டன் இல்லம் சென்று ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்கவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29–ந் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான நகலும் அன்றே வி.கே.சசிகலாவிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், 31–ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த வி.கே.சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.

முதல்–அமைச்சராக ஆதரவு

இதற்கிடையே, அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் சிலர், தமிழகத்தின் முதல்–அமைச்சராகவும் வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். அதாவது, கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று அதற்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். முதல்–அமைச்சராக பொறுப்பேற்க வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு பெருகியது. நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான மு.தம்பிதுரையும், வி.கே.சசிகலா தமிழகத்தின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை மூலம் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளும் போயஸ் கார்டன் சென்று வி.கே.சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதனால், வி.கே.சசிகலா முதல்–அமைச்சராக பொறுப்பேற்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஜெயலலிதா உருவப்படம் திறப்பு?

ஆனால், போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் ஆள் உயர உருவப்படம் திறக்கப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் முதல்–அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் வந்தார்கள் என்றும் தகவல் பரவியது.

இந்த பரபரப்புகளுக்கு இடையே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

ஆலோசனை கூட்டம்

இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நல்லாசியோடு அ.தி.மு.க. பொது செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இந்நிலையில் கட்சிப் பணிகள் குறித்து, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், தொகுதி வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்திடும் வகையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், வருகின்ற 4–1–2017 (நாளை) முதல் 9–1–2017 வரை மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:–

சென்னை – திருவள்ளூர்

4–1–2017 (புதன்கிழமை)காலை – வடசென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தியம், காஞ்சீபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு. மாலை – திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு.

6–1–2017 (வெள்ளிக்கிழமை) காலை – தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம். மாலை – சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர்.

7–1–2017 (சனிக்கிழமை)காலை – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், மதுரை புறநகர். மாலை – கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.

திருநெல்வேலி – தூத்துக்குடி

8–1–2017 (ஞாயிறுக்கிழமை)காலை – திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.

9–1–2017 (திங்கட்கிழமை) காலை– திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி. மாலை – திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

ஆர்.கே.நகரில் போட்டியா?

எனவே, கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிந்த பிறகே, முதல்–அமைச்சராக வி.கே.சசிகலா பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. அவர் தமிழகத்தின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்கும் பட்சத்தில், அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.

தற்போதைய நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, அதில் சசிகலா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அவர் போட்டியிட விரும்பாத பட்சத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனது தொகுதியை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.


Next Story