குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால்தான் தட்டம்மை, ரூபெல்லா நோய்களை ஒழிக்க முடியும்


குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால்தான் தட்டம்மை, ரூபெல்லா நோய்களை ஒழிக்க முடியும்
x
தினத்தந்தி 28 Feb 2017 11:31 PM GMT (Updated: 28 Feb 2017 11:30 PM GMT)

9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால்தான் தட்டம்மை, ரூபெல்லா நோய்களை ஒழிக்க முடியும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆய்வு

தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை முழுமையாகத் தடுக்கும் உயரிய நோக்கில், 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பிப்ரவரி 6–ந்தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இத்தடுப்பூசி இதுவரை 85 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. இம்முகாம் குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இலவச தடுப்பூசி

9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் இந்த தடுப்பூசியை அளிக்கும்போதுதான் போலியோவைப் போன்று தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை தமிழகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

எனவே, இதுவரை தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இத்தடுப்பூசியை எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்குவதற்காக, இன்று முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் வழங்கப்பட உள்ளது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும்.

தகுதி சான்றிதழ்

உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் ஹெங்க் பெக்டேம் சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘தட்டம்மை ரூபெல்லாவிற்கு போடப்படும் தடுப்பூசி புனேவில் தயாரிக்கப்படுகிறது.

இது 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியை ஆய்வு செய்து 100 சதவீதம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வழங்கியுள்ளது. தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ பாதிப்போ ஏற்படாது, மிகவும் பாதுகாப்பானது. இந்த தடுப்பூசியை வழங்குவதற்கு பெற்றோர்களிடமிருந்து எவ்வித ஒப்புதல் கடிதம் பெற தேவையில்லை.

இத்தடுப்பூசி பற்றி சமூக வளைதளங்களில் உலாவரும் தவறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வு கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் த.சபிதா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் க.குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குனர் செங்குட்டுவன் உள்பட மருத்துவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story