ரூ.29 லட்சத்தை ‘டெபாசிட்’ செய்யாததால் ‘முத்துராமலிங்கம்’ படத்தை திரையிட ஐகோர்ட்டு தடை


ரூ.29 லட்சத்தை ‘டெபாசிட்’ செய்யாததால் ‘முத்துராமலிங்கம்’ படத்தை திரையிட ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 28 Feb 2017 11:31 PM GMT (Updated: 28 Feb 2017 11:30 PM GMT)

ரூ.29 லட்சத்தை டெபாசிட் செய்யாததால், ‘முத்துராமலிங்கம்’ படத்தை திரையிட ஐகோர்ட்டு தடைவிதித்தது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், நிதிநிறுவன அதிபர் எம்.வி. பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முத்துராமலிங்கம்

நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘முத்துராமலிங்கம்’. இந்த படத்தை குளோபல் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர் விஜய்பிரகாஷ் மற்றும் நரசிம்மராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் இருவரும் என்னிடம் பல்வேறு தேதிகளில், வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.28 லட்சத்து 55 ஆயிரம் கடனாக வாங்கினார்கள்.

இந்த கடன் தொகையை திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பித்தருவதாக கூறி ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், இந்த பணத்தை திருப்பித்தராமல் ‘முத்துராமலிங்கம்’ திரைப்படத்தை பிப்ரவரி 24-ந் தேதி வெளியிடப்போவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

தடை வேண்டும்

எனவே, எனக்கு தரவேண்டிய கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்து 650-யை தராமல் ‘முத்துராமலிங்கம்’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் கடந்த 24-ந் தேதி விசாரித்தார். அப்போது, திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரும் ரூ.29 லட்சத்தை ஐகோர்ட்டில் டெபாசிட் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த திரைப்படம் கடந்த 24-ந் தேதி வெளியானது.

திரையிட தடை

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல் வி.சுப்பிரமணியன் ஆஜராகி, ‘இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, எதிர்மனுதாரர்கள் ரூ.29 லட்சத்தை டெபாசிட் செய்யவில்லை’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘டெபாசிட் தொகையை தயாரிப்பாளர்கள் செலுத்தாததால், ‘முத்துராமலிங்கம்’ படத்தை திரையிட தடை விதிக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Next Story