மருமகளை கற்பழித்த தாய்மாமனுக்கு 10 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர், மனைவியிடம் தகராறு ஏற்பட்டால், தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்று விடுவார்.
சென்னை,
இந்த நிலையில், கடந்த 2014–ம் ஆண்டு தன் தங்கை வீட்டில் தங்கினார். அப்போது, தங்கையின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மருமகளை மிரட்டி ஸ்ரீதர் கற்பழித்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்ததும், போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கர்ப்பம் அடைந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், இந்த கற்பழிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கலைமதி, நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், ‘ஸ்ரீதர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ரூ.2 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.