பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2017 11:37 PM GMT (Updated: 28 Feb 2017 11:37 PM GMT)

கோடை காலங்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை–எர்ணாகுளம்

சென்னை சென்டிரல்–எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06005) ஏப்ரல் மாதம் 3, 10, 17, மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

எர்ணாகுளம்–சென்னை சென்டிரல் இடையேயான சிறப்பு கட்டண ரெயில் (06006) ஏப்ரல் மாதம் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். (இந்த ரெயில் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று வரும்).

மதுரையில் இருந்தும்...

எர்ணாகுளம்–மைசூரு இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06041) ஏப்ரல் மாதம் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மைசூரை சென்றடையும்.

மதுரை–காச்சிகுடா இடையேயான சிறப்பு கட்டண ரெயில் (06933) இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் வழியாக, வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு காச்சிகுடாவை சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

அதிவிரைவு ரெயிலாக மாற்றம்

மேலும், சென்னை எழும்பூர்–திருச்சி இடையே இயக்கப்படும் ‘மலைக்கோட்டை’ விரைவு (எக்ஸ்பிரஸ்) ரெயில் (வண்டி எண்:16177) வருகிற ஜூன் மாதம் 8–ந் தேதி முதல் அதிவிரைவு ரெயிலாக (12653) இயக்கப்படும். இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

மறு மார்க்கமாக திருச்சி–சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் ‘மலைக்கோட்டை’ எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16178) வருகிற ஜூன் மாதம் 8–ந் தேதி முதல் அதிவிரைவு ரெயிலாக (12654) இயக்கப்படும். திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும் அந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை வந்தடையும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story