திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்:அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினிகாந்த்-வைரமுத்து வாழ்த்து


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்:அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினிகாந்த்-வைரமுத்து வாழ்த்து
x
தினத்தந்தி 1 March 2017 2:45 PM GMT (Updated: 1 March 2017 2:44 PM GMT)

மு.க.ஸ்டா லினுக்கு இன்று 65-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டா லினுக்கு இன்று 65-வது பிறந்தநாள். இதையொட்டி அவர் இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு  சென்று அஞ்சலி செலுத்தி னார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் மு.க.ஸ்டா லின் ‘கேக்’ வெட்டினார்.

அதன் பிறகு கீழ்ப்பாக் கத்தில் உள்ள பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.பின்னர் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை மற்றும் பேரக் குழந்தைகளுடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். அப்போது இயக்குனர் அமிர்தம், மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. மகளிரணியினருடன் சென்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். செல்வியும் வாழ்த்து கூறினார். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்மொய்தீன், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். 

நடிகர் ரஜினிகாந்த்-வைரமுத்து வாழ்த்து

மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, கவிஞர் வைரமுத்து நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் அப்போது ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றார்.

அதனை தொடர்ந்து சென்னையில் தனியார் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவர்களுடன்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடினார்.

Next Story