எந்தவித தவறும் நடக்கவில்லை என்றால் ஜெயலலிதா மரணம் பற்றி பதில் சொல்ல அரசு தயங்குவது ஏன்?
எந்தவித தவறும் நடக்கவில்லை என்றால் ஜெயலலிதா மரணம் பற்றி பதில் சொல்ல அரசு தயங்குவது ஏன்? என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–புரட்சியின் நிறம் காவி
புரட்சியின் நிறம் சிவப்பு என்று தான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் புரட்சியின் நிறம் காவி என்பதை பாரத தேசம் முழுவதும் தெரிய வைப்போம். கோழிக்கோட்டில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் உயிரிழந்தவர்களின் வரலாறு புத்தகத்தை மோடி வெளியிட்டார். கேரளாவில் பா.ஜ.க. கவுன்சிலர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை ரீதியாக கம்யூனிஸ்டுகள் நடக்கிறார்கள் என்பதை உணர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் அது நடக்காது.
இரட்டை வேடம் போடுவதில் கம்யூனிஸ்டுகளுக்கு நிகர் யாரும் கிடையாது. நெடுவாசல், மெரினா போன்ற இடங்களில் அனாவசியமாக இளைஞர்களை தவறாக வழிநடத்தியது கம்யூனிஸ்டுகள் தான். தங்கள் பெயரை தங்கள் இயக்கங்களுக்கு வைக்காமல் ஒளிந்து கொண்டு போராட்டத்தில் பங்கெடுத்து கொள்கிறார்கள். தொழிற்சாலையை வரவிடாமல் தடுப்பதும் கம்யூனிஸ்டுகள் தான். இவர்களை எதிர்ப்பது தான் பா.ஜ.க., இந்து இயக்கங்களின் கொள்கை.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தை சார்ந்த ஒருவர் நெடுவாசல், காரைக்காலுக்கு சென்றுவிட்டு என்னை பார்க்க வந்தார். அவரிடம் நான் மக்கள் உணர்வுகளை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு நல்லதே நடக்கும் என்றாலும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினேன்.
ஒன்றை உறுதியாக இப்போது சொல்கிறேன். எந்த விதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதை பா.ஜ.க. பொறுத்து கொள்ளாது. அதை திரும்ப பெறுவதற்கு மற்றவர்களை விட எங்கள் முயற்சி கடுமையாக இருக்கும்.
ஏன் தயங்குகிறார்கள்ஓ.பன்னீர்செல்வம் பதவி காலத்தில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டு இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. தனக்கு அதிகாரம் இருக்கும்போது அதை பற்றி கவலைப்படாமல் அதிகாரம் பறிபோன பின்பு அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.
மக்கள் தெளிவுப்பட வேண்டும். இப்போது இருக்கும் அரசு எந்தவித தவறும் நடக்கவில்லை என்றால் ஜெயலலிதா மரணம் பற்றி வெளிப்படையாக சொல்லிவிட்டு போகலாமே? ஏன் அவர்கள் தயங்குகிறார்கள் என்பது தான் மக்களுக்கு இருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.