நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது; எடப்பாடி பழனிசாமி உறுதி


நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது; எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 2 March 2017 5:45 AM IST (Updated: 2 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரிசபை சமீபத்தில் அனுமதி வழங்கியது.

சென்னை,

நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் இவ்வாறு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருக்கிறது.

போராட்டம்

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நெடுவாசலில் கடந்த மாதம் 16–ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 14–வது நாளாக நீடித்தது.

இப்போராட்டத்தில் பக்கத்து கிராம மக்களும் பங்கேற்று உள்ளனர். திரளான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றதால் போராட்ட களம் விரிவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

தமிழக அரசு பேச்சுவார்த்தை

போராட்டக்காரர்களை அழைத்து தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில், நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் சி.வேலு, ஏ.ராமநாதன், கே.தட்சிணாமூர்த்தி, ஆர்.எஸ்.விஜயகுமாரன், வை.கோ.ராமநாதன், ஏ.எஸ்.பன்னீர், வை.ராஜேந்திரன், சோ.வேல்சாமி, கே.வி.செந்தில்தாஸ், ஆர்.ராம்குமார், வை.பார்த்திபன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்துமாறு கோரிக்கை மனு அளித்தார்கள்.

கோரிக்கை

தற்போது நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகம் (ஓ.என்.ஜி.சி.) ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், இப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றும், காவிரி கடைமடை பகுதியில் உள்ள இக்கிராமத்தில் போதிய நீர் ஆதாரம் இன்றி நிலத்தடி நீர் மூலமே விவசாயம் தற்போது நடைபெறுவதாகவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முதல்–அமைச்சர் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

அரசு உறுதுணை

நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளின் கோரிக்கையை முதல்–அமைச்சர் கவனமாக கேட்டுக்கொண்டார். இதுகுறித்து பிப்ரவரி 27–ந் தேதியன்று பிரதமரை நேரில் சந்தித்தபோது நெடுவாசல் விவசாயிகளின் பிரச்சினைகளை தான் எடுத்துரைத்ததாகவும், அதை அப்போதே ஊடகம் மூலம் தெரிவித்ததாகவும் கூறினார்.

நெடுவாசல் கிராம மக்களின் உணர்வுகளை பிரதமரிடம் நேரடியாக கொண்டு சென்ற முதல்–அமைச்சருக்கு நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று முதல்–அமைச்சர் உறுதியளித்தார்.

அனுமதி வழங்காது

மேலும், இத்திட்டத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமம் மாநில அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதால், நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்றும், எனவே, நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை என்றும் முதல்–அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக்கூடிய எந்த திட்டமானாலும், அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது எனவும், மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் நெடுவாசல் கிராம பிரதிநிதிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story