சிரிப்பு இல்லை, கை குலுக்கவில்லை சிலைபோல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த விஜயகாந்த்


சிரிப்பு இல்லை, கை குலுக்கவில்லை சிலைபோல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த விஜயகாந்த்
x
தினத்தந்தி 2 March 2017 11:51 AM IST (Updated: 2 March 2017 11:51 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிலைபோல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம்,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர், விழுப் புரம் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது மற்ற அரசியல் தலைவர்கள் போல் அல்லாமல் வித்தியாச மான முறையில் நடந்து கொண்டார்.

பிறந்த நாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிக்களில் தொண்டர்கள் வரிசையில் நின்று வாழ்த்து சொல்வது, தலைவர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் விஜயகாந்த் நிகழ்ச்சி மேடையில் அமர்ந்து தொண்டர்களின் குடும் பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ருசிகரமான வகையில் இருந்தது.

நிகழ்ச்சி மேடையில் விஜயகாந்த் நாற்காலி போட்டு சிலை போல் அமர்ந்து கையை கட்டியவாறு இருந்தார். அவருக்கு இருபுறமும் இரு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. அதில் தே.மு.தி.க. தொண்டர்கள் குடும்பத்துடன் வந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

விஜயகாந்த்துடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொண்டர்கள் குடும்பத்துடன் நின்று இருந்தனர். ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வேக வேகமாக வரவழைக்கப்பட்டு இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். 5 வினாடிகள் மட்டுமே விஜயகாந்த் அருகில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். வந்த வேகத்தில் வேக வேகமாக மேடையில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
 
தன்னுடன் போட்டோ எடுக்க வந்தவர்களை விஜயகாந்த் கவனிக்காமல் அமர்ந்து இருந்தார். அவர்களைப் பார்க்கவோ, புன் சிரிப்போ இல்லாமல் சிலை போல் அமர்ந்து இருந்தது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி தே.மு.தி.க. தொண்டர் ஒருவர் கூறும் போது, ‘‘நான் விஜயகாந்துடன் போட்டோ எடுப்பதற்காக மனைவி குழந்தைகளை அழைத்து வந்தேன். எல்லோரும் வரிசையில் நின்று இருந்தோம். எனது முறைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. எங்களை மேடையில் ஏற்றி நாற்காலியில் விஜயகாந்த் அருகில் உட்கார வைத்தார்கள். 2 வினாடிகளில் இழுத்து கீழே இறக்கி விட்டனர். விஜயகாந்த் யாரையும் பார்க்காமல் அமர்ந்து இருந்தார். ஒரு புன் சிரிப்பு கூட இல்லை, அவருடன் பேச முடியவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது’’ என்றார்.

ஆனால் இது அங்கு வேடிக்கை பார்க்க வந்த தொண்டர்களுக்கு ருசிகர காட்சியாக இருந்தது. இது பற்றி விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி மிகப்பிரபலம் ஆகிவிட்டது. இது மிகப்பெரிய வெற்றி’’ விஜயகாந்த்துடன் போட்டோ  எடுத்து திரும்பிய குடும்பத்தினர் மிகவும் திருப்தியாக இருக்கிறார்கள்’’ என்றார்.

சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் தொண்டர் ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் அறைவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story