தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்றம்
தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு தடை இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்பட 2 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் விற்பனைக்காக தனியார் நிறுவனம் ஒன்று நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கிறது. அதனை குறைந்த விலை கொடுத்து எடுத்து, அதிக விலைக்கு அந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.
இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்ட மக்கள் ஆற்று நீரை நம்பியே இருக்கின்றனர். எனவே தனியார் நிறுவனம் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்து கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குளிர்பான நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்துக்கு பயன்படுத்தியது போக, உள்ள உபரி நீரை எடுத்து தான் நாங்கள் பயன்படுத்துகின்றோம் என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தண்ணீர் எடுக்க தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தர விட்டனர். இதன்மூலம் தாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான ஆலைகள் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளது.
Next Story