நெடுவாசலில் யாருக்கு எதிராக போராட்டம் நடக்கிறது? செங்கோட்டையன் தகவல்
மத்திய அரசை எதிர்த்துதான் நெடுவாசல் போரட்டம் நடக்கிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிஉள்ளார்.
கோவை,
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் எனும் கிராமத்திலும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கு இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந் தேதி நெடுவாசல் பகுதி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
இத்திட்டம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு, வடகாடு கல்லிக்கொல்லை, வாணக்கன்காடு, தற்காகுறிச்சி, நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லை ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகளிடம் பல ஏக்கர் நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. அந்த நிலங்களில் எண்ணெய் வளங்கள் பற்றி ஆய்வு செய்யப்போவதாகவும், மண்எண்ணெய் எடுக்கப்போவதாகவும் அப்பகுதி விவசாயிகளிடம் கூறினர். மேலும் அந்த நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய், எரிவாயுவை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆழ்குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களை அடைத்துவிட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் சென்றுவிட்டனர்.
இந்நிலையில்தான் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அறிந்து, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவ, மாணவிகளும், இளைஞர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டகளத்திற்கு வந்தவாறு உள்ளனர். திரளான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றதால் போராட்டகளம் விரிவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரிசபை சமீபத்தில் அனுமதி வழங்கியது. போராட்டக்காரர்களை அழைத்து தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன், அப்பகுதியில் எரிவாயு திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை சோதனை குழாய் கிணறுகளை பார்வையிட்டு செல்கின்றனர்.
தமிழக அரசு உறுதியளித்தும் போராட்டம் தொடரும் நிலையில் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசை எதிர்த்துதான் நெடுவாசல் போரட்டம் நடக்கிறது என்று கூறிஉள்ளார்.
Next Story