கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இழப்பீடு முழுமையாக வழங்காததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இழப்பீடு முழுமையாக வழங்காததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
x
தினத்தந்தி 3 March 2017 12:30 AM IST (Updated: 3 March 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இழப்பீடு முழுமையாக வழங்காததால் தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு பதில் அளிக்கும்படி தலைமை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

சென்னை,

கும்பகோணத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி இறந்தனர். இதனால் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க கோரி பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பதுரை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை நியமித்தது. இழப்பீடு நிர்ணயம் செய்து ஐகோர்ட்டில் அவர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான தீக்காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், சிறு காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த இழப்பீடு தொகைக்கு, 2004 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு 8 சதவீதமும், 2011 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு 8.6 சதவீதமும், 2012 முதல் தற்போது வரை 8.7 சதவீதமும் வட்டித்தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. இதை ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இந்நிலையில், மனுதாரர் இன்பராஜ், தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.தமிழரசன், ‘பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க இந்த ஐகோர்ட்டில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி இழப்பீடு, அதற்குரிய வட்டியுடன் சேர்ந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஆனால் ரூ.8 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. 2004-ம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய ரூ.1 லட்சமும், அதற்கான வட்டியும் குறைக்கப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

பதில் அளிக்க உத்தரவு

மேலும் அவர், ‘ஐகோர்ட்டுக்கு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், இழப்பீடு வழங்காததால், தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story