ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 2 March 2017 8:48 PM GMT (Updated: 2 March 2017 8:47 PM GMT)

ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை,

பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதி வருகிறார்கள். மொழித்தேர்வை தமிழ், உருது, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் மாணவர்கள் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்தார். இதன் காரணமாக கடந்த வருடத்தை விட இந்த வருடம் பிளஸ்-2 தேர்வை 65 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகிறார்கள்.

ஆய்வக உதவியாளர்கள்

பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். நீட் தேர்வை எழுத மாணவர்கள் தயாராக உள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஜெயலலிதா ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள். இப்போது ஆசிரியர்கள் பணியிடம் காலி இல்லை. ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள். இதை கணக்கில் கொண்டால் 3 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும். அந்த காலியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்படும். முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்களை நியமிப்பது குறித்து முதல் அமைச்சரிடம் கேட்டு முடிவு செய்து அறிவிக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Next Story