அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம் பிரச்சினையில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தலையிட முடியாது


அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம் பிரச்சினையில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தலையிட முடியாது
x
தினத்தந்தி 3 March 2017 12:23 AM GMT (Updated: 3 March 2017 12:22 AM GMT)

அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம் பிரச்சினையில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தலையிட முடியாது என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூறினார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து நவநீதகிருஷ்ணன் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம்

கேள்வி:– மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8–ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக கூறியிருக்கிறாரே?.

பதில்:– அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, 75 நாட்களும் அங்கே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. பின்னர், 2 மாதங்களாக அவர் முதல்–அமைச்சராக இருந்தார். அப்போதும் எந்த கேள்வியும் அவர் எழுப்பவில்லை. சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபோதும், அதை முன்மொழிந்தவர், ஓ.பன்னீர்செல்வம். அப்போதும் அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. தற்போது, அவருக்கு முதல்–அமைச்சர் வாய்ப்பு கிடைக்காததால் மனசாட்சிக்கு விரோதமாக இப்படி கூறுகிறார். போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஒரு நாடகத்தை நடத்த முயற்சி செய்கிறார். அதை யாரும் நம்ப வேண்டாம்.

சசிகலா ராஜினாமா?

கேள்வி:– ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, என்னை பார்த்து கையை காண்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே?.

பதில்:– அமைச்சர் செங்கோட்டையன் கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. பேச்சு சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது.

கேள்வி:– அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:– தண்டனை பெற்றவர்கள் பொதுச் செயலாளராக இருக்கக்கூடாது என்ற சட்ட விதி எதுவும் இல்லை. தண்டனை காலத்தில் லாலு பிரசாத் யாதவ் கட்சி தலைவராக இருந்திருக்கிறார். எனவே, சசிகலா பதவி விலக வேண்டும் என்பது சட்டத்துக்கு புறம்பானது. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் முன்மொழிந்தார்கள். அனைவரின் ஒப்புதலுடன் தான் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தலையிட முடியாது

கேள்வி:– இந்திய தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தரப்பில் முறையான பதில் அளிக்கப்பட்டுள்ளதா?.

பதில்:– தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது உள்கட்சி விவகாரம். அ.தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்யும் விவகாரத்தில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தலையிட முடியாது. உள்கட்சி தேர்தல் நடந்தது குறித்து மட்டுமே தேர்தல் ஆணையம் கேட்க முடியும். வேறு எந்த வி‌ஷயத்திலும் தலையிட முடியாது. அ.தி.மு.க. சட்ட விதிகளிலேயே, நிர்வாகிகள் தேர்வை எதிர்த்து எங்கும் முறையிடமாட்டோம் என்று உள்ளது.

கேள்வி:– ஜெயலலிதா மரணம் குறித்து...

பதில்:– அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story