புதுக்கோட்டை கோட்டைக்காட்டில் நடைபெற்ற இயற்கை எரிவாயு திட்ட போராட்டம் வாபஸ்


புதுக்கோட்டை கோட்டைக்காட்டில் நடைபெற்ற இயற்கை எரிவாயு திட்ட போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 4 March 2017 5:15 AM IST (Updated: 4 March 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை கோட்டைக்காட்டில் நடைபெற்ற இயற்கை எரிவாயு திட்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் விவசாய நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளன. இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த திட்டத்தை எதிர்த்து 3 இடங்களிலும் விவசாயிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெடுவாசலில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கோட்டைக்காட்டில் கடந்த 4 நாட்களாக அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றும் கோட்டைக்காட்டில் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் கோட்டைக்காடு வந்தார். அப்போது கோட்டைக்காடு போராட்ட குழு பிரதிநிதி ஆரோக்கியசாமி உள்ளிட்டவர்களை அழைத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோட்டைக்காடு பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக போடப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும், விவசாய நிலத்தில் போடப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு எடுக்க போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடி கொடுக்க வேண்டும் என போராட்ட குழுவினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

தற்காலிகமாக வாபஸ்

இதையடுத்து கோட்டைக்காடு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

Next Story