அரசு ஆஸ்பத்திரிகளில் முழு உடல் பரிசோதனை மையத்தை விரிவுபடுத்த திட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர்
அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தை மதுரை, நெல்லை, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை,
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தை தொடங்கிவைத்தார். தற்போது அந்த மையம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்து உள்ளது.
இதனை வரவேற்கும் விதமாக அந்த பரிசோதனை மையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் ஆய்வு
அப்போது நோயாளிகளின் வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து மைய ஊழியர்களுக்கு ஓராண்டு நிறைவடைந்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
ரூ.10 கோடி மதிப்பில் ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 13 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் இந்த திட்டத்தை மதுரை, நெல்லை, கோவை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்.
‘நீட்’ தேர்வு
மார்ச் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தில் 100 சதவீத இலக்கை கண்டிப்பாக எட்டுவோம். மருத்துவ மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலேயே முதல் முறையாக சர்க்கரை நோயை முன்கூட்டியே கண்டறியும் அதிநவீன மின்கருவி இந்த பரிசோதனை மையத்தில் உள்ளது. இதனால் ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story