நியூட்ரினோ திட்டம் பற்றி ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு பசுமை தீர்ப்பாயத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்


நியூட்ரினோ திட்டம் பற்றி ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு பசுமை தீர்ப்பாயத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்
x
தினத்தந்தி 3 March 2017 10:00 PM GMT (Updated: 3 March 2017 8:29 PM GMT)

நியூட்ரினோ திட்டம் பற்றி ஆய்வு செய்ய நிபுணர் குழுவில் இடம்பெறுகிறவர்களின் பெயரை பரிந்துரைத்து பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 2011-ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கியது. நீர்நிலை பகுதியில் வரும் இந்தத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. எனவே அதை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஏற்கனவே தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்படி, நியூட்ரினோ திட்டத்தை அனுமதிப்பது அல்லது அனுமதி மறுப்பது சம்பந்தமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும்” என்று கூறப்பட்டிருந்தது.

குழு அமைப்பு

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வக்கீல் யாஸ்மின் அலி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் வேல்ராஜ், வேதியியல் துறை தலைவர் பாண்டுரங்கன், சென்னை பல்கலைக்கழக மண்ணியல் துறை பேராசிரியர் சுரேஷ்காந்தி, அணு வேதியியல் பேராசிரியர் சிவாஜி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம், பாதுகாப்புக்கான மையத்தின் இயக்குனர் நேருகுமார் வைத்திலிங்கம், முன்னாள் தலைமை வனப்பாதுகாவலர் பாலாஜி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் பொறியாளர் சேகர் செயல்படுவார். இந்தக் குழுவை அரசுக்கு பரிந்துரைக்கிறோம். 3 மாதங்கள் ஆய்வு செய்து இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 10-ந் தேதிக்கு தீர்ப்பாய உறுப்பினர்கள் தள்ளிவைத்தனர். 

Next Story