பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்


பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2017 11:00 PM GMT (Updated: 3 March 2017 8:32 PM GMT)

11.3 சதவீத பெண் எம்.பி.க்களே இருப்பதால், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

சென்னை,

சென்னையில் 1917-ம் ஆண்டு மார்கரட்கசின்ஸ், டொரோத்தி ஜினராஜ தாசா என்ற ஐரோப்பிய பெண்களால் ‘இந்திய மாதர் சங்கம்’ தொடங்கப்பட்டது. தற்போது இந்த சங்கம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கவர்னர் வித்யாசாகர் ராவ், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும், இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பத்மா வெங்கட்ராமன் வரவேற்றார். மாதங்கி ராமகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் சாந்தா, சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் ஆகியோருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றம்

நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

நம் நாட்டில் பெண்களை கடவுளாக வணங்கினாலும், துரதிருஷ்டவசமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடந்து கொண்டுதான் வருகிறது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற செயல்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் வேதனை அளிக்கிறது.

எட்டாக்கனி

அதேநேரம், இந்திய மாதர் சங்கம் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் வெற்றி பெற பெண்கள் இன்னும் பலமைல் தூரத்துக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நம்முடைய இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண்களுக்கு சமவாய்ப்பு, சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று உறுதிப்படுத்தினாலும், நிஜவாழ்க்கையில் அவையெல்லாம் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் மதிப்பிடப்படும்போது பெண்களின் பங்கு கணக்கில் எடுக்கப்படுவது இல்லை. இதற்கு காரணம், பெண்களுக்கு எதிரான பாகுபாடு நம்மிடையே இன்றும் உள்ளது.

முன்னேற்றத்துக்கு தடை

பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று பல நடவடிக்கைகளை எடுத்தாலும், சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. மக்களவையில் 11.3 சதவீத பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

சர்வதேச அளவில் பார்த்தால், நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 22.8 சதவீதமாகத்தான் உள்ளது. எனவே, இவற்றையெல்லாம் பரிசீலித்து, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும்விதமாக இடஒதுக்கீடு முறையை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும். இடஒதுக்கீடு அளித்தால்தான், அரசியல்சட்ட உத்தரவாதம் கிடைப்பதுடன், பெண்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்க முடியும்.

பெண்களுக்கு எல்லா திறமைகளும் உள்ளன. ஆனால், பெண் என்ற பாகுபாடு இந்த சமுதாயத்தில் நிலவுவதால், அவர்களது முன்னேற்றம் தடைப்படுகிறது.

சம வாய்ப்பு

நாடு சுதந்திரமடைந்து 69 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பெண்களின் முன்னேற்றம் என்பது முழுமை அடையாமல்தான் உள்ளது. எனவே, பெண்களின் முன்னேற்றம் முழுமை அடையவேண்டும் என்றால், கல்வி மற்றும் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆகியவற்றில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு எல்லா துறைகளிலும் சமவாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர்

முன்னதாக, கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:-

ஒரு தனியார் நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. 22 ஆயிரம் அலுவலகங்களில் நடத்திய ஆய்வில், 30 சதவீதத்துக்கு அதிகமாக பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களில் அதிக லாபமும், 30 சதவீதத்துக்கு குறைவான எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றும் அலுவகலங்களில் அதிக நஷ்டமும் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு பெண்களுக்கு ஆளுமை திறமையும், ஆற்றலும் அதிகம் உள்ளது.

இவ்வாறு கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.

Next Story