இடம் தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் காணாமல் போவார் டி.டி.வி.தினகரன்


இடம் தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் காணாமல் போவார் டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 3 March 2017 10:30 PM GMT (Updated: 3 March 2017 8:35 PM GMT)

வரும் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

காணாமல் போவார்கள்

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்- எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பி.எச்.பாண்டியன் என்னவெல்லாம் செய்தார் என்பது தொண்டர்களுக்கு தெரியும். இன்றைக்கு இன்னொரு பி.எச்.பாண்டியனாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். வரும் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள்.

அதிர்ச்சி தரும் விஷயம்

கேள்வி:- சட்டசபை கூடும் போது அதிர்ச்சி தரும் விஷயங்கள் வெளிவரும் என்று க.பாண்டியராஜன் கூறியிருக்கிறாரே?

பதில்:- அவருக்கு ஏதோ அதிர்ச்சி தரும் விஷயம் இருக்கலாம்.

கேள்வி:- சசிகலாவை புழல் சிறைக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா?

பதில்:- எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

கேள்வி:- அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- எந்த நியமனமும் எல்லோரையும் கலந்து ஆலோசித்து, பொதுச்செயலாளர் சசிகலா அனுமதியுடன் அறிவிப்போம்.

முழுமையாக அடங்குவார்கள்

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு நீங்கள் விளக்கம் அனுப்பி இருக்கிறீர்களே?

பதில்:- துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் அந்த மனுவை அனுப்பினேன். பன்னீர்செல்வம் போன்றவர்கள் தினமும் ஏதாவது சொல்லி தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்கள் முழுமையாக அடங்கி விடுவார்கள்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

எம்.பி.க்கள் கூட்டம்

முன்னதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ‘அம்மாவின் இதயக்கனி’ என்ற தலைப்பில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை, அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். அதனை இலக்கிய அணி செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவருமான பா.வளர்மதி பெற்றுக்கொண்டார்.

அதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டி.டி.வி.தினகரன், 9-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

வாழ்த்து

பின்னர் கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தி மற்றும் காஞ்சீபுரம் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து கட்சி பணிகள் குறித்து விவாதித்தனர். புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, முத்தியால்பேட்டை தொகுதி வையாபுரி மணிகண்டன், முதலியார்பேட்டை தொகுதி பாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நெல்லை மாநகர் மாவட்டம், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் அனீஸ் ஆகியோர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story