‘தீபா தொடங்கிய பேரவையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை’ தொண்டர்கள் குமுறல்
ஜெ.தீபா தொடங்கிய பேரவை நிர்வாகிகளிடம் கருத்துவேறுபாடு நிலவுவதால், தொண்டர்கள் பேரவையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என குமுறி வருகின்றனர்.
சென்னை,
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொண்டர்களின் விருப்பப்படி ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். பேரவைக்கு நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அப்போது, பேரவையின் நிர்வாகிகளாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை தீபாவின் கணவர் மாதவன் சமாதானப்படுத்தினார். பேரவை நிர்வாகிகள் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதால் ஜெ.தீபாவின் வீட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது.
கருத்து வேறுபாடு
சென்னை வளசரவாக்கத்தில் பேரவை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து பேரவையின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது உண்மை தான் என்று சிலரும், அப்படி எதுவும் எங்களுக்கு தெரியாது என்று சிலரும் கூறினர். இதனால் பேரவை இரண்டாக பிளவுபட்டுள்ளதா? என தொண்டர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
தொண்டர்கள் குமுறல்
இதுகுறித்து ஜெ.தீபா வீட்டின் முன் நின்ற தொண்டர்கள் சிலர் கூறியதாவது:-
பேரவையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை? நாங்கள் அ.தி.மு.க.வில் பல வருடங்களாக தொண்டர்களாக இருந்துவந்தோம். ஜெயலலிதா மறைந்ததால் அவரது அண்ணன் மகளான தீபாவை நம்பி இங்கு வந்தோம். ஆனால் தற்போது பேரவையில் நடப்பதை பார்த்தால் ஜெ.தீபா மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.
தீபா இதுபோன்ற சர்ச்சைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபா செயல்பட வேண்டும் என்பதே எங்களை போன்ற அடிப்படை தொண்டர்களின் கோரிக்கை. தமிழக மக்களுக்கும், எங்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story