தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை அடியோடு சரிந்தது


தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை அடியோடு சரிந்தது
x
தினத்தந்தி 4 March 2017 3:21 PM IST (Updated: 4 March 2017 3:20 PM IST)
t-max-icont-min-icon

மளிகை, பெட்டிக்கடைகளில் விற்காமல் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதால் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை சரிந்துஉள்ளது.

சென்னை,

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க கூடாது, குடிக்க கூடாது என்ற முடிவை தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் சங்கங்கள் எடுத்தன. அன்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவு சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மட்டு மின்றி கிராமங்கள் வரை கோகோ கோலா, பெப்சி, 7அப், ஸ்பரைட் போன்ற வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் பேரவையும், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பும் வெளிநாட்டு குளிர்பானங்களை அனைத்து வியாபாரிகளும் வாங்கி விற்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றன.

 அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்கள், ஜுஸ் போன்றவற்றை விற்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள சிறு பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் கூட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டன.
பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள தமிழ் உணர்வு காரணமாக கடைகளுக்கு சென்றாலும் வெளிநாட்டு குளிர்பானம் வேண்டாம், உள்நாட்டு தயாரிப்புகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி குடிக்கிறார்கள்.

படித்தவர்கள் இடையே மட்டுமின்றி பாமர மக்களிடமும் ஏற்பட்டுள்ள தமிழ் உணர்வு காரணமாக வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு வர்த்தக நிறுவனங்களிலும், மளிகை, பெட்டிக்கடைகளிலும் வினியோகிக்கப்பட்ட வெளி நாட்டு குளிர்பானங்கள் விற்காமல் தேக்கம் அடைந்துள்ளன. சூப்பர் மார்க்கெட், பெரிய மால்களிலும் கூட பொதுமக்கள் வெளிநாட்டு குளிர்பானத்தை தவிர்த்து குளிர்பானம் மற்றும் பழ ஜுஸ் வகைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை யாரும் சீண்டாததால் விற்காமல் குவிந்து கிடக்கின்றன. வணிகர் சங்கத்தினர் ஒருசில கடைகளில் புகுந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டமும் நடத்தினர். இதனால் வியாபாரிகள் வெளிநாட்டு குளிர்பானங்களை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து கொடுங்கை யூர் முத்தமிழ் நகரில் பெட்டிக் கடை வைத்துள்ள ஜான்சன் கூறியதாவது:-

வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. என் கடைக்கு வாரத்திற்கு 3 கேஸ் (27 பாட்டில்கள்) குளிர்பானங்கள் வாங்கி விற்பனை செய்வேன். ஆனால் ஒரு மாதமாக 3 பாட்டில் கூட விற்கவில்லை. அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பான தயாரிப்புகளான பன்னீர் சோடா, பவண்டோ, ஜுஸ் வகைகளை வாங்குகிறார்கள். ஸ்டாக் உள்ளவரை விற்று விட்டு அதன் பிறகு விற்பனையை நிறுத்த வேண்டியதுதான். மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். 50 சதவீதத்திற்கு மேலாக விற்பனை பாதித்துள்ளது என்றார்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சப்ளை செய்யக்கூடிய ஏஜென்சியை சேர்ஷ் ஒருவர் கூறும்போது, 75 சதவீத வெளிநாட்டு குளிர்பான விற்பனை பாதித்துள்ளது. மக்கள் யாரும் இப்போது அவற்றை வாங்குவது இல்லை. உள்நாட்டு தயாரிப்புகளுக்கு மாறி விட்டார்கள் என்றார்.

முத்தமிழ் நகரைச் சேர்ந்த குளிர்பான மொத்த விற்பனையாளர் ஜெயக்குமார் கூறும்போது, “ரூபாய் நோட்டு பிரச்சினை ஏற்பட்டதில் இருந்தே குளிர்பான விற்பனை பாதித்தது. வியாபாரிகள் சங்கங்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க கூடாது என்று நிர்பந்தம் செய்வதால் வேறு வழியில்லாமல் கடைக்காரர்கள் வாங்குவதில்லை. மேலும் தற்போது உள்ள தட்பவெப்ப சூழலும் சரியில்லை. மொத்தத்தில் 10 சதவீத வெளிநாட்டு குளிர்பான விற்பனை பாதித்துள்ளது என்றார். ஆனால் வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகள் தரப்பில் தங்களுக்கு இதுவரையில் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மறுத்துள்ளனர்.

Next Story