சென்னை கோபாலபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி
சென்னை கோபாலபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கி லாக்கரை திறக்க முடியாததால் ஆவணங்களை எரித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.
சென்னை,
சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஆரியசமாஜ் அலுவலக கட்டிடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த வங்கியில் இருந்து கரும்புகை கிளம்பியது.தீ எரியும் வாசனையை கண்டு ஆரியசமாஜ் கட்டிடத்தில் வசிப்பவர்கள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர்.
அப்போது வங்கியின் கிரில் கதவு பூட்டு மற்றும் வங்கியின் 2 பூட்டுகள் வெல்டிங் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வங்கி திறந்திருந்தது. புகையும் வெளியேறிக் கொண்டிருந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆவணங்கள் எரிப்புவங்கி பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது குறித்து வங்கியின் மேலாளர் நந்தினிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் உடனடியாக வங்கிக்கு வந்தார்.
வங்கியின் உள்ளே போலீசாரும், அவரும் சென்று பார்த்த போது விண்ணப்ப படிவங்கள், பணம் எடுப்பதற்கான சலான்கள் கிழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் இருந்தது.
வங்கி அலுவலகம் அலங்கோலமாக காட்சியளித்தது. அதிர்ச்சியடைந்த நந்தினி வங்கி லாக்கரை திறந்து பார்த்தார். அதில் இருந்த பணம் அப்படியே இருந்தது. கொள்ளை போகவில்லை.
இதையடுத்து போலீசார் வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வங்கியில் பதிவான கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.
மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனும் நேரில் வந்து கொள்ளை முயற்சி நடைபெற்ற வங்கியை பார்வையிட்டார்.
வடமாநில கொள்ளையர்கள்?இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, ‘வங்கியின் பூட்டுகளை வெல்டிங் எந்திரம் மூலம் எளிதில் உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால், ஆத்திரத்தில் வங்கியில் இருந்த ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். வடமாநில கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள். கடந்த ஜனவரி மாதம் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. எனவே அந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களே இந்த வங்கியில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது’ என்றனர்.
கொள்ளை முயற்சி சம்பவத்தில் நேற்று அந்த வங்கி கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.