ஒரு குடும்பத்திடம் கட்சி சென்றுவிட கூடாது என்பது தான் நோக்கம்; ஓ.பன்னீர்செல்வம்


ஒரு குடும்பத்திடம் கட்சி சென்றுவிட கூடாது என்பது தான் நோக்கம்; ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 4 March 2017 11:15 PM GMT (Updated: 2017-03-05T02:03:13+05:30)

கட்சியை உடைக்க தர்மயுத்தத்தை தொடங்கவில்லை என்றும், ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சென்றுவிட கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் என்றும் டி.டி.வி.தினகரனுக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் சசிகலா ஒரு அணியாகவும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்தில் நேற்று நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினார். இதில் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், மாபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், சத்யபாமா எம்.பி. உள்பட எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி 8–ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதம் மற்றும் நீதி கேட்பு பயண ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் பதில்

பி.எச்.பாண்டியனும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பதாக அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய கூட்டத்தில் பேசியதாவது:–

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, நாம் வேண்டாத தெய்வம் இல்லை, போகாத கோவில் இல்லை, செய்யாத பூஜைகள் இல்லை. ஆனாலும் ஜெயலலிதா இல்லாத துர்பாக்கிய சூழலில் நாம் இருக்கிறோம். கட்சியை நம் கையில் தந்துவிட்டு மறைந்திருக்கிறார். ஜெயலலிதா என் மீது நம்பிக்கை வைத்து 2 முறை என்னை முதல்–அமைச்சராக்கினார்.

தமிழக வரலாற்றில் ஒரே நாளில் ஜல்லிக்கட்டு சட்டத்தை கொண்டுவந்து, அமல்படுத்தியது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடந்த நம்முடைய அரசு தான்.

தஞ்சாவூர் பொம்மை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சசிகலா முதல்–அமைச்சராக ஆகவேண்டும் என்று என்னை பேட்டி கொடுக்க சொன்னார். பதவியில் இருக்கும் ஒரு முதல்–அமைச்சர் இன்னொருவரை முதல்–அமைச்சர் ஆகவேண்டும் என்று சொன்னால், கட்சியில் பூசல் நிலவுவதாக கருதி கவர்னர் சட்டமன்றத்தை கலைத்துவிட மாட்டாரா? என்று நான் கூறினேன். ஆனாலும் என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர்.

பதவி போனதை எண்ணி நான் ஒருபோதும் வருந்தியது இல்லை. பதவியில் இருந்தால் தஞ்சாவூர் பொம்மை மாதிரி அந்த குடும்பத்தினர் ஆட்டிப் படைப்பார்கள். ஜெயலலிதா வளர்த்த கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் செல்லக்கூடாது என்பதை எதிர்த்து போராடவில்லை என்றால், அது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். அதனால் நானும், நமது அணி மூத்த நிர்வாகிகளும் போராடி வருகிறோம்.

ரூ.3 கோடி, 3 கிலோ தங்கம்

சசிகலாவை பொதுச்செயலாளராக தொண்டர்களும், மக்களும் ஏற்க மறுக்கிறார்கள். அவர் முதல்–அமைச்சரானால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இப்படியே சென்றால் உள்ளாட்சி தேர்தலில் நமக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்று நான் முதல்–அமைச்சராக இருந்தபோது அமைச்சர்கள் சிலர் சொன்னார்கள். அவர்கள் தற்போது சசிகலா அணியில் தான் இருக்கின்றனர்.

ரூ.3 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் வேண்டாம் என்று சசிகலா தரப்பினரின் பிடியில் இருந்து சண்முகநாதன் உள்ளிட்ட நமது அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தப்பித்து வந்துவிட்டனர். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது ஏன்? தொற்றுநோய் வந்துவிடும் என்று எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால் சசிகலா உள்ளே இருந்தால் தொற்றுநோய் பரவாதா?

ஒரு குடும்பத்தின் கையில்...

கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது. எங்களையும் நடிக்க வைத்துவிட்டார்கள். அமைச்சர் பதவி கொடுக்காததால் கோபித்துக்கொண்டு செங்கோட்டையன் சில நாட்கள் வரவில்லை. ஆனால் அவர் ஜெயலலிதா தன்னை பார்த்து இரட்டை விரல்களை உயர்த்தி காண்பித்தார் என்று அண்டப்புளுகு புளுகுகிறார். ஆகாச புளுகு திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் இனிப்பு சாப்பிட்டதாக சொல்கிறார்.

கட்சியை உடைக்க இந்த தர்மயுத்தத்தை தொடங்கவில்லை. ஒரு குடும்பத்தின் கையில் கட்சி சென்றுவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஒரு குடும்பத்தின் கையில் சேர்க்க அவர்கள் தான் எம்.எல்.ஏ.க்களை அடைத்துவைத்தார்கள். மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள்.

சி.பி.ஐ. விசாரித்தால்...

தமிழக மக்களை அன்போடு நேசித்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் புதைந்திருக்கிறது. இதை நாம் வெளியே கொண்டுவர வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. விசாரித்தால் தான் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளியே வரும்.

மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் மட்டுமே கட்சியின் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்ற படிப்பினையை உருவாக்க வேண்டும். அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அப்போது ஒரு காகிதத்தில் ‘பூஜ்ஜியம்’ என்று எழுதி சசிகலாவை ஒருவர்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே நல்ல முடிவை எடுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்.

ஆனால் அவர்கள் தான் தற்போது தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். நாமக்கல் வரும்போது தொண்டர்களாகிய நீங்கள், அவரிடம் நல்ல முடிவு எடுக்குமாறு சொல்லி அனுப்புங்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுகிறது.


Next Story