“இனி எல்லாமே வெற்றிகரமாக நடக்கும்” அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு


“இனி எல்லாமே வெற்றிகரமாக நடக்கும்” அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2017 10:00 PM GMT (Updated: 31 March 2017 7:10 PM GMT)

ரஜினிகாந்த் நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு “இனி எல்லாமே வெற்றிகரமாக நடக்கும்” என்று பேசினார்.

சென்னையில் நடந்த நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் நடிகர்-நடிகைகள் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

வெற்றி

நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பேசும்போது, “நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. இனி எல்லாமே வெற்றிகரமாக நடக்கும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பலநாள் கனவு. இங்கு கட்டிடமாகவும் வெறும் கல்லாகவும் ஆன பல சுழற்சிகளை நான் பார்த்து இருக்கிறேன். இந்த இடத்தில் புதிய கட்டிடம் உருவாகும். அதில் நானும் ஒரு சிமெண்டாக இருப்பதில் சந்தோஷம். திரை கலைஞர்களுக்கான பெரிய கோட்டையாக நடிகர் சங்க கட்டிடம் இங்கு அமையும்” என்றார்.

நாசர்-விஷால்

நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-

“நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த வங்கியிலும் கடன் வாங்காமல் இந்த கட்டிடத்தை கட்ட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருக்கிறது. விஷாலும், கார்த்தியும் அடுத்த படத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.10 கோடியை கட்டிட நிதிக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர். நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் அனைவருடைய உழைப்பும் இதில் இருக்கிறது. விவசாயிகள் வருகிற 3-ந் தேதி நடத்த உள்ள போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு அளிக்கும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் விஷால் விழாவில் பேசியதாவது:-

“நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. நடிகர்-நடிகைகள் அனைவரும் ஆளுக்கொரு செங்கல் எடுத்து வந்து தங்களை இந்த வரலாற்று நிகழ்வில் பதிய வைத்து உள்ளனர். சி.எம்.டி.ஏ, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிடம் இருந்தும் முறையான அனுமதி பெற்று இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. அனைத்து நடிகர்-நடிகைகளின் உழைப்பும் இதில் இருக்கிறது.

ரூ.10 கோடி வழங்குவோம்

இந்த கட்டிடத்தை கட்டி முடித்து 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறப்பு விழா நடத்தப்படும். சிறந்த கட்டிடமாக இது உருவாகும். மாதம் தோறும் ரூ.50 லட்சம் வருமானம் வரக்கூடிய வாய்ப்பும் இந்த கட்டிடம் மூலம் ஏற்படும். அந்த தொகையை வைத்து மூத்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்துக்கு வழிகள் செய்யப்படும்.

எல்லா தடைகளையும் தாண்டி விட்டோம். ஏறி மிதித்தாலும் எங்கள் இலக்கில் போய்க்கொண்டே இருப்போம். நடிகர்-நடிகைகளுக்கு தொடர்ந்து நல்லதை செய்வோம். கார்த்தியும், நானும் கட்டிட நிதிக்கு ரூ.10 கோடி வழங்குவோம். கட்டிடம் சிறப்பாக வரும். நடிகர் சங்கத்தில் இருந்து ஒரு பைசா எடுக்க மாட்டோம். தவறு செய்ய மாட்டோம்”.

இவ்வாறு விஷால் பேசினார். 

Next Story